அன்புள்ள தம்பி வெற்றிவேல் அவர்களுக்கு,

உங்களது வானவல்லி வரலாற்றுப் புதினத்தை முழுவதும் படித்தேன். கரிகாலரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் புதினம் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாகவும் தொய்வில்லாமலும், விறுவிறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதத்தில் அருமை. தங்களின் முதல் நாவல் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு, எழுத்துப் பணியிலேயே ஊரியவர்கள் எழுதியதை போன்று இருந்தது. மேலும் அனைவரும் புரிந்து கொள்ள முடிகின்ற எளிய நடையில் எழுத்தியமைக்கு மிகவும் நன்றி. முதல் பாகத்தில் விறலி வரும்பொழுது அவளது அணிகலன்களையும், மற்ற வசதியுள்ள பெண்கள் அணியும்  அணிகலன்களையும் தனித்தனியாக வர்ணனை செய்துள்ளீர்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களைப் படிக்கும்பொழுது அணிகலன்களுக்கென்று இத்தனை பெயர்களா? என்று வியந்தேன். பிறகு விறலி  பற்றி படிக்கும்பொழுது  அவள் கூறிய ஒரு வார்த்தை பின்னால் எவ்வளவு பெரிய வெற்றியின் வித்து என்று  மகிழ்ந்தேன்.

உங்களது புதினத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீரத்தில் சிறந்து விளங்குகிறார்கள். வானவல்லி, அவந்திகா, கார்த்திகா போன்று அனைத்து பெண்களும் நேரத்திற்கு தகுந்தாற்போன்று சமயோசித புத்தியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தங்களின் வானவல்லி புதினம் போர் முறை பற்றியும், போர்களின் வியூகத்தைப் பற்றியும் விளக்கியுள்ளது மிகவும் நன்றாக இருந்தது. கடல் போர் பற்றி நன்கு சித்தரித்துள்ளீர்கள். யவன அடிமைகளின் நிலைமை பற்றி நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. பிறகு , இந்தப் புதினத்தின் நடுவில் மம்மி மற்றும் 300 பருத்தி வீரர்கள் பற்றிய தகவல் தந்ததும் சுவையாக இருந்தது. காளான் என்கிற இளந்திரையன் மற்றும் இம்ஹோடேப் இருவரும் இறந்தது மட்டும் மிகவும் வருத்தமளித்தது. புதினத்தின் நடுவில் அனைத்து தகவல்களுக்கு சான்று அளித்துள்ளது  தங்களது உழைப்பை எடுத்துக் காட்டுகிறது.

விறலிக் கூத்தில் வரும் பாடல் மிகவும் நன்றாக உள்ளது. தங்களுக்கு அந்தப் பாடலை எழுதித் தந்த தங்கள் சகோதரருக்கு பாராட்டுக்கள். நீங்கள் மேன்மேலும்  எல்லாராலும் விரும்பப்படுகின்ற, பயனுள்ள புதினங்களைப் படைத்து எழுத்துத் துறையில் தங்களை இனிவரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக வசிக்கும்படி வளர வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு
M.மைதிலி
30/08/2016