சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் வெனம் (Venom). கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். இந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஒரு ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணியானது கதாநாயகனான ஓம்புயிரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து இணக்கமாகிவிடும். ஒட்டுண்ணியும், ஓம்புயிரும் சேர்ந்து செயல்படுவார்கள். இதனால், கதாநாயகனுக்குப் புதுப்புது வலிமையான சக்திகள் கிடைக்கும். கதாநாயகன் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவான்.

கதையில் மட்டுமே இந்த மாதிரி ஒட்டுண்ணியும், ஓம்புயிரும் சேர்ந்து, இணக்கத்துடன் வாழ முடியும். நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை. ஒட்டுண்ணியால் ஓம்புயிருக்கு ஒரு காலத்திலும் நன்மை ஏற்படுத்த முடியும். ஒட்டுண்ணிக்கு ‘தன் கையே தனக்குதவி’ போன்ற நியதிகளெல்லாம் தெரியாது. அது வாழ்வதற்கு ஒரு ஓம்புயிர் தேவை. ஓம்புயிர் உயிரோடு வாழும் வரை அதை ஏய்த்து வாழ்ந்தே பழக்கப்பட்டவை. அவைத் தனது வாழ்க்கைச் சுழற்சிக்கு முழுவதும் ஓம்புயிரையே  சார்ந்திருக்கும். ஓம்புயிரின் உடலில் அவை மறைந்திருந்து தங்கி தேவையான ஆற்றலைக் கிரகித்துக்கொள்ளும்.

நாம் சிலரைக் கிராமத்தில் பார்த்திருப்போம். அவர்களின் பார்வைக்கு மட்டும் சில காட்சிகள் தென்படும், அவர்களுக்கு  மட்டுமே மூளைக்குள் குரல் கேட்கும். அந்தக் குரலை தெய்விகக் குரல் என்பார்கள். இதேப் போன்றுதான் எனக்குத்  தெரிந்த நண்பன் ஒருவன் பெங்களூரில் இருந்தான். தைரியமானவன்… ஆனால், அவனுக்குப் பூனைகளைக் கண்டாலே பிடிக்காது. அவனது இயல்பு அதுதான். ஆனால், அவனது சுபாவம் திடீரென்று மாறத் தொடங்கியது. பூனைகளைக் கண்டால் ஓடிச் சென்று தூக்கிக் கொஞ்சத் தொடங்கினான். சில சமயங்களில் தனக்குத் தானே பேசிக்கொள்வான்.‘மூளைக்குள் யாரோ அமர்ந்து பேசுகிறார்கள்’ என்று கூறுவான். மாடியின் சுவர் மீதேறி நிற்பான். காரணம் கேட்டால், ‘குதித்துவிடவேண்டும் போலத் தோன்றுகிறது’ என்று பயமுறுத்துவான். 

மாறிவிட்ட அவனது சுபாவத்தைக் கண்டு பயந்துபோன உறவினர்கள் அவனுக்குப் பேயெல்லாம் ஓட்டினார்கள். எந்தப் பலனும் இல்லை. கடைசியாக அவனுக்கு மருத்துவச் சோதனை செய்தபோது அவனுக்குள் டாக்சோபிளாஸ்மா (Taxoplasma) என்ற ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்த டாக்சோபிளாஸ்மா ஒட்டுண்ணி செய்த மாயாஜாலம் தான் இவனது மாறிவிட்ட சுபாவத்துக்குக் காரணம்.

டாக்சோ பிளாஸ்மா ஒட்டுண்ணியானது பூனையின் உடலுக்குள் வாழும் ஒரு வகை ஒட்டுண்ணி. இதனால் பூனையின் உடலுக்குள் மட்டும் தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். இந்த ஒட்டுண்ணியானது பூனைக் கழிவுகளின் வழியே வெளியேறும் போது எலி, அணில் போன்ற பிராணிகளின் வயிற்றுக்குள் சென்று விடும். இந்த ஒட்டுண்ணி மீண்டும் இனப்பெருக்கம் செய்வதற்கு பூனையின் உடலுக்குள் சென்றாக வேண்டும். இதற்காக இந்த ஒட்டுண்ணி எலியின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஹேக் செய்யத் தொடங்கும். முதல் கட்டமாக எலி தனது அச்சத்தை இழந்துவிடும். பூனையின் வாசனையைக் கண்டாலே காத தூரம் ஓடிச் சென்று ஒளியும் எலியானது ‘பூனையினால் என்ன செய்துவிட முடியும்?’ என்று நினைத்து பூனையைப் பொருட்டாக மதிக்காமல் அதைத் தேடிச் சென்று அதற்கு இரையாகும். ’பூனைகளை அவைக் காதலிக்கத் தொடங்கி இறக்கும்’ என்று கூறினால் கூடப் பொருத்தமாக இருக்கும். இவை அனைத்தும் டாக்சோபிளாஸ்மா செய்யும் மாய விளையாட்டு! 

இந்த டாக்சோபிளாஸ்மா ஒரு எலியைத் தாக்கினால் அதன் அச்ச உணர்வை அகற்றிவிடும். ஆனால், அதுவே மனிதனைத் தாக்கினால்…? மேலே தெரிவித்த எனது நண்பனுக்கு ஏற்பட்ட நிலைமை தான் அனைவருக்கும். 

’சிலருக்கு மூளைக்குள் திடீரென்று அசரிரீ போன்று குரல் கேட்கும், விசித்திரமாகப் பார்வையில் ஏதோ தென்படும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும், அதிக சாகசத்தை விரும்புவார்கள்’ இவை அனைத்துக்கும் காரணம் ஒட்டுண்ணிகளின் தாக்குதலே. அடுத்தமுறை இது மாதிரி ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் ‘புது சக்தி கிடைக்கிறது’ என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உடனே ஒட்டுண்ணி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மந்திரவாதி, சூனியக்காரர்களைத் தேடிச் சென்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

அனைவருக்கும் தெரிந்த மற்றொரு ஒட்டுண்ணி பேன். அதனுடன் அமைதியாக வாழ்வதற்குப் பழகிக்கொண்டுவிட்டோம் நாம். 

சில ஒட்டுண்ணிகளின் செயல்பாடுகள் ஆச்சர்யத்தை வரவழைக்கும். ஐசோபாட் சைமோதோயா எக்சிகா (isopod Cymothoa exigua) என்ற ஒட்டுண்ணியானது லிதோக்னாதஸ் (Lithognathus) என்ற மீனின் நாக்கைத் தின்று நாக்குக்குப் பதிலாக ஒட்டிக்கொள்ளும். மீன் விழுங்குவதில் இந்த ஒட்டுண்ணி தின்றதுபோக மீதிதான் மீனின் வயிற்றுக்குள் செல்லும். மற்றொரு கணுக்காலி (Arthropod) ஒட்டுண்ணி இருக்கிறது, அதன் பெயர் சிர்ரிபீடியா (Cirripedia). இந்த கணுக்காலி நண்டுகளின் முதுகில் ஏறி அமர்ந்து ஈஸ்டிரோஜனைச் செலுத்தும். ஆண் நண்டுகளுக்குப் பெண் தன்மை வந்துவிடும். உடனே அவை முட்டைகளை அடைகாக்க வலைகளைத் தோண்ட ஆரம்பிக்கும். ஆண் நண்டிடம் முட்டைகள் இருக்காது. ஆனால், அதன் முதுகில் இருக்கும் ஒட்டுண்ணிக்கு வீடு கட்டித் தர வேண்டும் அல்லவா?

இந்த ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் ஓம்புயிரை மட்டுமே நம்பி இருக்கின்றன. ஓம்புயிரின் நரம்பு மண்டலத்தைச் சரியாகத் தெரிந்து வைத்துத் தாக்குகின்றன. ஓம்புயிரை நம்பித்தானே நாம் வாழ்கிறோம் என்று நினைத்து ‘ஐயோ பாவம்’ உதவி செய்வோம் என்று நினைத்துவிடாது இந்த ஒட்டுண்ணிகள். சமயம் கிடைக்கும்போது ஓம்புயிரையே அழித்துவிடுபவை இவை. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிவிட்ட கதைதான்.

ஒட்டுண்ணிகளுக்கும் நமது நோய் தடைகாப்பு அமைப்புக்கும் இடையே நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டு அலாதியானது. நமது நோய் தடைகாப்பு அமைப்பையும் மீறி ஒட்டுண்ணிகள் எப்படி நமது நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றன என்பது பற்றி விவரிக்கிறார் நரம்பியல் நிபுணரான லஷ்மி நரசிம்மன்….

கண்ணுக்குத் தெரியாத அமீபா, பாக்டீரியா, வைரஸ் முதலான நுண்ணுயிர்கள்… வயிற்றுக்குள் வாழும் குடல் புழுக்கள்… கண்ணுக்குத் தெரிந்த பேன், உண்ணி ஆகிய அனைத்துமே ஒட்டுண்ணிகள் (Parasite) தான். மனிதனுக்கு ஏற்படும் பெரும்பான்மையான தொற்று நோய்களுக்குக் காரணம் இந்த ஒட்டுண்ணிகளே. நாம் ஆரோக்கியமாக இருக்கும்வரை நமக்குப் பெரிய அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், நமது ஆரோக்கியம் குறைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் நலிவடையும்போதுதான் அவை வீரியத்துடன் நம்மைத் தாக்கத் தொடங்கும். 

நாம் வளர்க்கும் நாய்கள் நாம் செல்வதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக, வாலாட்டிக்கொண்டு பாசமாக இருக்கும். ஆனால், அதுவே ரேபிஸ் வைரஸ் தாக்கிவிட்டால் அதன் குணாதிசயமே மாறி, வெறி பிடித்துவிடும். யாரைப் பார்த்தாலும் பயந்துபோய் கடித்துக் குதறும். இந்த குண மாற்றம் திடீரென்று எதனால் ஏற்படுகிறது? 

ஒட்டுண்ணியான ரேபிஸ் வைரஸ் மூளை நியூரான்களைத் தாக்கி, இயல்புத் தன்மையையே மாற்றிவிடுவதுவதால் தான்…

ஒரு தேர்ந்த நரம்பியல் நிபுணர் அறிந்து வைத்திருப்பதை விடவும் ஒட்டுண்ணிகள் மனித நரம்பியல் அமைப்பு பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. மனித உடலில் எங்கு, எப்படி ஒளிந்துகொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலத் தாக்குதலிலிருந்து தப்பி உயிர் வாழ முடியுமோ, அந்த இடத்தில் தான் மறைந்து உயிர் வாழும். ஒட்டுண்ணிகள் ஓம்புயிரின் உடலில் வாழ்வதற்கென்றே உருவானவை. 

ஒவ்வொரு ஒட்டுண்ணியும், ஒவ்வொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து தாக்கும். அதாவது, தன்னிடம் உள்ள தாக்குதல் திறனைக் கொண்டு (Weapons system), உடல் உறுப்பின் பாதுகாப்பு (Defense system) திறனைச் சமாளிக்க முடியுமோ, அந்த மாதிரியான இடத்தைத்தான் இவை தேர்ந்தெடுக்கும். அதாவது, பலவீனமான இடத்தைக் கண்டறிந்து பதுங்கித் தாக்கும் யுக்தி தான் இது. இதே மாதிரிதான் ஒவ்வொரு ஒட்டுண்ணியும் தமக்குரிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. உதாரணத்துக்கு ரேபிஸ்… 

ரேபிஸ் வைரஸ் மனித உடலுக்குள் ஊடுருவியதும் அது உடனே குரல் வளை, ஹிப்போகேம்பஸ் (hippocampus) மற்றும் லிம்பிக் அமைப்புகளுக்குத் தான் சென்று தஞ்சமடையும். லிம்பிக் சிஸ்டத்தை அவை ஹேக் (hack) செய்வதால் தான் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எப்போதும் அதீத அச்ச உணர்வில் இருப்பார்கள். குரல் வளை சிதையும் போது அவர்கள் இயல்பாக பேசுவது கூட நாய் போல கத்துவதைப் போன்று நமக்குத் தெரியும். தண்ணீர் குடிக்க முடியாது. தண்ணீரைக் கண்டாலே அலறுவதற்குக் காரணம் இதுதான். இதனால் தான் ஹைட்ரோபோபியோ ஏற்படுகிறது. 

ஒட்டுண்ணிகள் நமது மூளையின் நியூரான்களை எந்த இடத்தில் தாக்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் வெளிப்பாடுகள் அமையும். லிம்பிக் சிஸ்டம் (Limbic System) நமது நடத்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பு. ஒட்டுண்ணிகள் லிம்பிக் சிஸ்டத்தைத் தாக்கும்போது நமது நடத்தையே மாறிவிடும். நினைவுகளைச் சேமித்து வைக்கும் நியூரான் தாக்கப்படும்போது அனைத்தும் மறந்துவிடும். விசுவல் ஏரியா தாக்கப்படும்போதுதான் கண்ணுக்கு முன்னால் யாரோ நிற்பது போன்று தெரியும். மூளைக்குள் குரல் கேட்பது கூட இந்த மாதிரியான தாக்குதலினால் தான்.

ஹீமோ பைலேரியன் (hemoparasite) ரத்தத்துக்குள் வாழும் ஒட்டுண்ணி. நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியே ரத்தத்தின் வெள்ளை அணுக்களைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஆனால், இந்த ஹீமோ பைலேரியன் ஒட்டுண்ணியானது நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் எதிர் நடவடிக்கை எடுக்க முடியாதபடி ரத்தச் சிவப்பனுக்குள் மறைந்திருந்து தமது இனத்தைப் பெருக்குகிறது. மலேரியா இந்த வகையில் தான் நமக்குள் தங்கி நம்மைத் தாக்குகிறது.   

மனித உடலில் மிகப்பெரிய பாதுகாப்பு அம்சத்துடன் இருப்பது அணுக்கரு. இதற்குள் தான் உயிரின் ஆதாரமான டி.என்.ஏ இருக்கிறது. இந்த அணுக்கருவுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியாகும் இடம் மைட்டோகாண்ட்ரியா (mitochondria). இந்த மைட்டோ காண்ட்ரியாவில் ஒரு டி.என்.ஏ மட்டும் உடலுக்குத் தொடர்பே இல்லாமல் அணுக்கருவுக்கு வெளியே இருக்கிறது. மனித உடலிலிருக்கும் டி.என்.ஏ வானது  ஒன்று தாயிடமிருந்து வந்திருக்க வேண்டும் அல்லது தந்தையிடமிருந்து வந்திருக்கவேண்டும். ஆனால், இந்த மைட்டோ காண்ட்ரியா (mitochondria) டி.என்.ஏவானது பெற்றோரிடமிருந்து வராமல் யூக்கரியோட்டா ( eukaryotes ) எனும் பாக்டீரியாவிலிருந்து வந்திருக்கிறது. ஆமாம்… மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏவானது யூக்கரியோட்டா பாக்டீரியாவுடையது. எதனாலும் அழிக்க முடியாத ஒட்டுண்ணியாக மனிதனின் அணுக்கருவுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியாகும் இடத்தையே ஆக்கிரமித்து வாழ்ந்துகொண்டிருக்கிறது இந்த யூக்கரியோட்டா. 

‘ஒட்டுண்ணியான யூக்கரியோட்டா பாக்டீரியாவால் இயக்கப்படும் மிகப்பெரிய உருவம் தான் மனிதன்’ என்று கூறினால் கூட சரியாக இருக்கும்…

இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதனுக்காகப் படைக்கப்பட்டவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால், மனிதன் படைக்கப்பட்டதே ஒட்டுண்ணிகளுக்காகத்தான் என்பது தான் உண்மை. 

வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து பரவும் நோய்களைப் பற்றியும், அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விளக்குகிறார் அவசர சிகிச்சை நிபுணர் பவித்ரா…

சிலருக்கு நாள்பட்ட காய்ச்சல், உடல் பலவீனம், கை கால் இணைப்புகளில் கடுமையான வலி, சளி, ஓயாத இருமல் போன்ற டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் அனைத்தும் உடலில் தென்படும். ஆனால், ரத்தப் பரிசோதனை செய்தால் டெங்கு ரிசஸ்ட் நெகட்டிவாக வரும். இந்த மாதிரியான சூழல்களில் நமது உடலில் ஒட்டுண்ணிகள் குறித்தும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். இந்த மாதிரியான உடல் நலப் பாதிப்புகள் ஒட்டுண்ணிகள் பரவும்போதுதான் ஏற்படும்.

சிலருக்கு உண்ணி கடித்த இடத்தில் சிவந்து போய் வட்டம் வட்டமாகக் கோடு இருக்கும். நுண்ணுயிர் ஒட்டுண்ணியானது உடலில் சென்றிருப்பதை இந்த அறிகுறி மூலம் உறுதி செய்துகொள்ளலாம். பொதுவாக, நோய்த்தொற்று ஏற்பட்ட வளர்ப்புப் பிராணிகளைத் தொடும்போதோ அல்லது பிராணிகளின் சிறுநீர், மலம், உமிழ்நீர் ஆகியவற்றின் மூலமோ தான் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகள் பரவுகின்றன. இந்த ஒட்டுண்ணிகள் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே. அதற்குக் காரணம் அவர்களின் நோய் தடைகாப்பு அமைப்பு முழுமையடையாமல் இருப்பதுதான். சில நேரங்களில் பூனைகளைத் தூக்கும்போது அவை நகத்தினால் நம்மைக் கீறிவிட்டு ஓடிவிடும். இந்த நகக்கீறல் வழியே டாக்சோபிளாஸ்மா ஒட்டுண்ணி நமக்குள் பரவும்போது கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதற்கு பூனைக் கீறல் காய்ச்சல் (Cat scratch fever) என்று பெயர். இதைத் தொடர்ந்து வாந்தி, குமட்டல், உடல் சோர்வு, தலைவலி, என்செபலோபதி (Encephalopathy) ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.சில நேரம் வீட்டுத் தொட்டியில் மீன் வளர்க்கிறவர்களுக்கு கை மற்றும் விரல்களுக்கிடையில் சொரி ஏற்பட்டதைப் போன்று அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு புண்ணாகி (Lesions), வீங்கிவிடும். இதற்கு மீன் தொட்டி புவளர்ச்சிறுமணிகள் (fish tank granuloma) என்று பெயர். மீன்களிலிருந்து தொற்றும் மைகோபாக்டீரியத்தினால் (Mycobacterium) இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.

நாய்களின் உடலில் வட்டப் புழுக்கள், கொக்கிப் புழுக்கள், உருளைப் புழுக்கள், தட்டைப் புழுக்கள் என்று பலவிதமான புழுக்கள் (worm) வளர்கின்றன. இந்தப் புழுக்கள் மனிதருக்குப் பரவுவதற்கு அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் பரவும் அபாயகரமான பிரச்னை அழற்சி நோய் (lyme diseases). இதற்கு உண்ணிக் காய்ச்சல் (tick fever) என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது நாய்களின் உடலில் இருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட உண்ணிகள் நம்மை கடிக்கும்போது முதலில் அந்த இடத்தில் எரிச்சல் ஏற்பட்டு தலைவலி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரும். இதைக் கண்டுகொள்ளாவிட்டால் உண்ணி வழியே பரவும் பாக்டீரியா, புழுக்கள் மூலம் வாதம், நரம்பியல் பிரச்னைகள் ஏற்படும் சாத்தியம் மிகமிக அதிகம்.

நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் எளிதில் நம்மால் கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால், கிளி நோய் வாய்ப்பட்டிருந்தாலும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அது ஒரே மாதிரி தான் செயல்படும். அதன் உமிழ்நீர், நக இடுக்கு, சிறுநீர் மற்றும் மலக் கழிவுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் மூலமும் நோய்த்தொற்றுகள் ஏற்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படும். பொதுவாகவே செல்லப்பிராணிகளை வளர்க்கும்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அவற்றைத் தொட்டபிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் மறக்காமல் கையைக் கழுவிக்கொள்ள வேண்டியது அவசியம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் நிச்சயம் வீட்டில் ஆன்ட்டி மைக்ரோபியல் சொல்யூசனால் தினமும் துடைக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது பிறாண்டிக் கீறினாலோ உடனே சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட வேண்டும். அதன் பிறகு மருத்துவனைச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய் வாய்ப்பட்டவர்கள் செல்லப் பிராணிகளைத் தொடாமல் இருப்பது நல்லது. அப்படியே நோய்த் தொற்று ஏற்பட்டாலும் தொடக்கத்திலேயே கண்டறிந்து உரியச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணப்படுத்தி விடலாம். இல்லையெனில் அதன் விளைவு விபரீதமாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார்.

ஒட்டுண்ணிகள் தொற்றாதபடி கால்நடைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்குகிறார் கால்நடை மருத்துவர் சௌந்தர பாண்டியன்…

“வளர்ப்புப் பிராணிகளைச் சுத்தமாகப் பராமரித்தாலே கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஒட்டுண்ணிகளைப் பற்றியும், அவற்றின் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகளைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒட்டுண்ணிகள் பரவுவதற்கு முக்கியக் காரணம் வளர்ப்புப் பிராணிகள் சரியான பராமரிப்பின்றி இருப்பதே. பிராணிகள் மீது காணப்படும் உண்ணி, பேன், பூச்சுகள் ஆகியவை தான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம். மருந்துக் கடைகளில் நாய்களைக் குளிப்பாட்டும் ஷாம்பூக்கள், சோப்பு, தெளிக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தினாலே புற ஒட்டுண்ணிகளை அழித்துவிடலாம். அக ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த நாய்கள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதன் எடைக்கு ஏற்ப குடற்புழு நீக்க மருந்துகளை (Deworming) மருத்துவர் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டும். இந்த நாய்களைத் தொடுவதன் மூலமாகவோ அல்லது விளையாடுவதன் மூலமாகவோ எந்த நோய்த்தொற்றுகளும் ஏற்படாது. முடிந்த வரை வீட்டு நாய்களைத் தெரு நாய்களுடன் செல்வதற்கோ அல்லது திறந்த வெளியில் திரிவதற்கோ அனுமதிக்காமல் இருப்பது நல்லது. முறையாகத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலே வளர்ப்புப் பிராணிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் அபாயத்தைத் தவிர்த்துவிடலாம். மற்றொரு அபாயகரமான, பெரும்பிரச்னை ‘ரேபிஸ் வைரஸ்’ தொற்று. இதைக் குணப்படுத்த முடியாது. ஆனால், இதை வருமுன் தடுத்துவிட முடியும். இதற்கும் இப்பொழுது தடுப்பூசிகள்.  இதே போன்று அனைத்து வளர்ப்பு விலங்குகளையும் நாம் சரியாகப் பராமரித்து, தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு வந்தால் ஒட்டுண்ணிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. செல்லப்பிராணிகளுக்குப் பயன்படுத்தும் உடை, தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பாத்திரம்  ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். புது நாயோ அல்லது பூனையோ வாங்கினால் கால்நடை மருத்துவரிடம் சென்று ஒட்டுண்ணி பிரச்னை இருக்கிறதா என்று பரிசோசனை செய்துகொள்வது அவசியம். சுத்தமாக இருந்தாலே ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய்களைத் தவிர்த்துவிடலாம்” என்று தெரிவித்தார்.  

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நீங்கள் வளர்க்கும் நாயோ அல்லது பூனையோ அருகில் வந்தால் விரட்டாதீர்கள். கால்நடைகளையும், வீட்டு வளர்ப்புப் பிராணிகளையும் சுத்தமாகப் பராமரித்தாலே ஒட்டுண்ணிகள் பற்றி அச்சப்படத் தேவையில்லை. அதனால் நாம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பராமரிப்போம். ஒட்டுண்ணி தாக்குதல் பற்றிக் கவலைப்படாமல் இருப்போம்…